இந்திய வரலாற்றில் கி.பி 1857ஆம் ஆண்டானது. மிக முக்கியமான காலகட்டமாகும். பாரம்பரியமிக்க முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் பஹதூர்ஷாஹ் ஜஃபரை ஆங்கிலேயர்கள் கைது செய்து ரங்கூன் (பர்மா) சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். இத்துடன் முகலாய ஆட்சி முடிவடைந்தது. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது. மேலும் 1857ஆம் வருடம் இந்தியர்கள் அனைவரும் சாதி மத வேறுபாடின்றி ஒருங்கிணைந்து இந்திய விடுதலைக்காகப் போர் புரிந்தார்கள். இதுவே முதல் இந்திய சுதந்திரப் போராகும். இதில் உலமாப்பெரு மக்கள் மகத்தான பங்கு வகித்தார்கள். இந்தப் போரில் எண்ணற்ற உலமாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். இது ஒரு நீண்ட வரலாறு. இந்தப் போரின் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி கண்டாலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களின் மூலம் விரைவில் சமாளித்துக் கொண்டார்கள். இதனால் இந்தப் போரின் முடிவு தலைகீழானது. முகலாய ஆட்சி முற்றுப்பெற்றுவிட்டது.
இந்நிலையில் மார்க்கக் கல்விக் கூடங்கள், ஈமான் – இறை நம்பிக்கையின் வெளிச்சம் மங்க ஆரம்பித்தது. இஸ்லாமியக் கொள்கை விரோத சக்திகளான கிறிஸ்தவம், இந்துத்துவம் போன்றவை பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்களைத் தங்களது வலைகளில் வீழ்த்துவதற்கான முயற்சிகளை முழு வீச்சோடு செய்ய ஆரம்பித்தன. முஸ்லிம் அரசுகள் பலமிழந்து செல்வாக்கும் குன்றி இந்தியாவின் வட பகுதியிலும் தென் பகுதியிலும் மார்க்கக் கல்லியின் நிலைமை மிகவும் தாழ்ந்து கொண்டிருந்தது. சிறிது சிறிதாகத் திறமை மிக்க ஆலிம்களின் தொகை குறைத்து மார்க்கக் கல்வி கற்கும் பணி பெரிதும் தேக்கமடைந்தது. அதனால் முஸ்லிம்கள் “தீனை” ப்பற்றிப் பாராமுகமாக இருக்க ஆரம்பித்தனர். தமிழகம், ஆந்திரம், கேரளம் மூன்றும் சேர்ந்த அன்றைய மதராஸ் மாகாணத்தில் ஆலிம்கள் குறைந்துகொண்டே வந்தனர். எனினும் ஆங்காங்கே இருந்த ஆலிம் பெருமக்கள் ஒரு சிலரிடம் சிலர் மார்க்கக் கல்வி பயிலச் சென்றாலும், கற்பதற்கான வசதிகள் அன்று இல்லை. கிதாபுகளை முழுமையாகப் படிக்கவோ, ஒரு கலையை முழுமையாகப் பயிலவோ வாய்ப்பும் இருக்கவில்லை. சில நூல்களையே கற்க முடிந்தது. எனவே அன்றைய மதராஸ் மாகாணத்தின் நிலை நாளுக்கு நாள் மார்க்க விஷயத்தில் பொலிவிழந்து கொண்டே வந்தது.
இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் முஸ்லிம்களைப் பாதுகாத்திடவும் புனித இஸ்லாத்தை விரோத சக்திகளிடமிருந்து காத்திடவும் இறைவனின் பேரருளால் தென்னாட்டு முஜத்தித், கல்விகளின் நன்கொடையாளர், சமுதாயச் சீர்திருத்தச் செம்மல், அண்ணல் அஃலா ஹள்ரத் அல்லாமா ஷம்சுல் உலாமா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் காதிரி (ரஹ்) அவர்கள் முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் பேரருளால் இறையச்சத்தை அடித்தளமாக கொண்டு ஹிஜ்ரி 1274,
கி.பி 1857 இல் மத்ரஸா பாகியாத்துஸ் ஸாலிஹாத்தை துவக்கினார்கள்.
கனிகள் குலுங்கும் மரத்தின் பழங்களைப் பறித்து தங்களின் திருக்கரங்களாலேயே மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாக கண்ட கனவு இக்கலைக் கூடம் உருவாகக் காரணமானது.
1857 முதல்1869 வரை 12 ஆண்டுகள் தங்களின் வீட்டு திண்ணையிலேயே மத்ரஸாவை நடத்தி வந்தார்கள். மாணவர்களின் எண்ணிக்கை பெருகிய போது மஸ்ஜிதின் தாழ்வாரத்திற்கு மாற்றி அங்கு 6 ஆண்டுகள் நடத்தி வந்தார்கள்.
ஹள்ரத் அவர்கள் தங்களின் சொந்த முயற்சியாலும் தன் அபிமான நண்பர்களின் உதவியாலும் 25 வருடங்கள் வரை நிர்வாகக் கமிட்டியின்றி சிறப்பாக நடத்தி வந்தார்கள்
மத்ரஸா வளர்ந்து விரிவடைந்த நேரத்தில் மத்ரஸாவின் உதவியாளர்கள் மேலும் மத்ரஸாவின் அபிமானிகளை ஹிஜ்ரீ 1299 ரபீஉல்அல்வல் பிறை 4 (கி.பி 1882 பிப்ரவரி 4) அன்று ஆலோசனை செய்வதற்காக ஒன்று கூட்டினார்கள்.
இனிவரும் காலங்களில் மத்ரஸாவின் செயல்பாடுகள் “மஜ்லிஸே ஷூரா” வின் ஆலோசனைப்படி நடைபெறும் என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஹிஜ்ரீ 1299 ஜமாதுல் ஆகிர் பிறை 6 (கி.பி 1882 ஏப்ரல் 25) அன்று மஜ்லிஸே ஷூரா தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு ஹிஜ்ரி 1292 (கி.பி 1875) ஆம் ஆண்டு தனி கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்விக்கூடம் அல்லாஹ்வின் அருளால் இன்றுவரை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்ரஸாவின் நற்பணிகள்
இதன் நிலையான நற்பணியின் காரணமாக பாக்கியாத்தின் செல்வப் புதல்வர்கள் ஆயிரக் கணக்கானோர் உலகெங்கும் பரவி மார்க்கத்திற்கும் இந்த சமுதாயத்திற்கும் சேவையாற்றி இம்மத்ரஸாவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள். மார்க்கப் பிரச்சாரம், நற்போதனை, ஆசிரியப் பணி, எழுத்துப் பணி, மார்க்கக் கல்விக் கூடங்களை நிறுவுதல், மார்க்கத் தீர்ப்பு வழங்குதல் போன்ற உயர் பணிகளில் ஈடுபட்டதுமன்றி அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகள் மூலம் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார்கள்.
அறியாமை இருளில் மூழ்கித் தத்தளித்த இவ்வுலகுக்கு முஹம்மது (ஸல்) எனும் பேரொளி நேரிய வழியைக் காட்டியது. மார்க்கத்தின் சீரான வழியை விட்டுத் தடம் புரண்டு சென்று கொண்டிருந்த இந்தத் தென்னாட்டுக்கு அஃலா ஹள்ரத் அப்துல் வஹ்ஹாப் என்னும் அருட்சுடர் தீன் ஒளியைக் காட்டியது. அன்னார் நிறுவிய அறக் கூடமாம் இந்த பாகியாத்தின் மடியில் தவழ்ந்து, கல்வி அமுது பருகி அகிலமெங்கும் பரவியிருக்கும் பாகவிகள் அனைவர் மீதும் இறைவா உன் நல்லருளைப் பொழிந்தருள்வாயாக! ஆமீன்
அண்ணல் ஆஃலா ஹள்ரத் அவர்கள் கரூர் மாவட்டம் ஜமீன் ஆத்தூரை சேர்ந்த மௌலானா ஹாபிள் அப்துல் காதர் சாஹிப் மற்றும் வேலூர் பட்டேல் முஹம்மது அமீன் சாஹிபின் அருமை புதல்வி ஃபாத்திமா தம்பதியருக்கு ஜமாதியுல் அவ்வல் பிறை 1 – ஹிஜ்ரி 1247 (கி .பி 7-10 -1831) சனிக்கிழமை அன்று தமிழ்நாடு ராய வேலூரில் பிறந்தார்கள். இளம் வயதில் வேலூரிலேயே மதக் கல்வியையும் மருத்துவக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற பின்னர் கிறிஸ்தவர்களிடம் விவாதம் செய்ய தேவையான பயிற்சியை விவாதத்தின் வித்தகரான மக்கா ஸவ்லத்தியாவின் நிறுவனர் அல்லாமா ரஹ்மத்துல்லாஹ் கீரானவி (ரஹ்) அவர்களை சந்திக்க வட இந்தியாவில் கீரானாவுக்குச் சென்று அவர்களிடம் பயிற்சி பெற்று வேலூர் திரும்பினார்கள். பிறகு மதராசின் கல்விக்கடல் இறைக்காதாலர் அல்லாமா குலாம் காதிர் (ரஹ்) அவர்களிடம் வாலாஜாபாத் பள்ளியின் திண்ணையில் அமர்ந்து ஞானமுதம் பெற்றார்கள்.
தங்களின் துணைவியார் ரழியா அமீர் பிவி அவர்கள் ஹிஜ்ரி 1284 ஸஃபர் 21 இல் வஃபாத் ஆனார்கள். அவ்வருடம் ஆஃலா ஹஜரத் அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது மக்காவில் ஒரு வருடம் 8 மாதங்கள் தங்கி இருந்தார்கள். அப்போது ஹரம் ஷரீஃபில் மௌலானா ஸய்யித் ஹுஸைன் பிஷாவரி (ரஹ்) இடமும், முஃப்தி ஷைக் அகமது ஜைனி தெஹ்லான் (ரஹ்) அவர்களிடமும் ஹதீஸ் கலையை கற்றார்கள். அக்காலகட்டத்தில் தான் மௌலானா ரஹ்மத்துல்லாஹி கீரானவி (ரஹ்) அவர்களிடமும் மௌலானா இம்தாதுல்லாஹ் முஹாஜிரே மக்கி (ரஹ்) அவர்களிடமும் பைஅத் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1280ல் ஹள்ரத் குத்பே வேலூர் (ரஹ்) அவர்களிடம் கிலாஃபத்தை பெற்று ஆன்மீக குருவாகவும் ஏற்றம் பெற்றார்கள்.
அண்ணல் ஆஃலா ஹள்ரத் அவர்கள் அகவிளக்கம், நுண்ணறிவு, தூரநோக்கு, குறிப்பால் அறியும் திறன், ஆன்மீக சிந்தனை, இறையச்சம், ஆய்வுத் திறன், நேர்த்தியான உடை, நடை, பாவனை, சுன்னத்துகளை பின்பற்றுவதில் அதீதஆர்வம் ஆகியவற்றின்ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தார்கள்.
“இல்லா லி யாஃபுதூன்” எனும் திருவசனம் கூறும் வணக்கத்தின் வடிவமாய் வாழ்ந்த அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி ஹிஜ்ரி 1337 ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதத்தின் கடைசியில் உடல் நலம் குன்றி மூன்று வாரங்கள் தொடர்ந்து பிணியின் காரணமாய் படுக்கையில் ஆனார்கள். ஹிஜ்ரி 1337 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 22சனிக்கிழமை (கி .பி 1919 ஜனவரி 25) ளுஹருக்கும் அஸருக்கும் இடையிலுள்ள நேரத்தில் அண்ணல் அவர்களின் தூய்மையான நாவு திக்ரில் திளைத்திருக்க முபாரக்கான முகம் பிரகாசித்துக் கொண்டிருக்க வல்ல நாயன் அல்லாஹ்வின் அன்பான அழைப்பினை ஆனந்தம் பொங்க ஏற்றவர்களாக தங்களை அவனிடம் ஒப்படைத்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
மறுநாள் ஹிஜ்ரி 1337 ரபியுல் ஆபிர் பிறை 23 ஞாயிற்றுக்கிழமை (கி .பி 1919 ஜனவரி 26) பிற்பகல் அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸாவை கோட்டை மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு குழுமிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அஃலா ஹள்ரத் அவர்களுடைய ஷைகு குத்பே வேலூர் ஹள்ரத் ஷாஹ் அப்துல் லத்தீப் (ரஹ்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய பிறகு அக்கல்வி ஞானக்களஞ்சியத்தை பாக்கியாத் பள்ளி வளாகத்தில் பூமிக்குள் மறைவு செய்யப்பட்டது.










Principal