பாடத்திட்டங்கள்

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை கொள்கைகளாக விளங்கும் குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் (சட்டதிட்டங்கள்), அகாயித் (கோட்பாடு) சம்பந்தமான கல்விகளில் திறமை பெற்று, இஸ்லாத்தின் எதிரிகளைத் தக்க ஆதாரங்களால் எதிர்கொள்ள வேண்டும் , இஸ்லாத்தின் பரிசுத்தத் தன்மையை நிலைநாட்டவேண்டும் எனும் நோக்கத்தில், மார்க்க போதனைகளின் மூலம் மக்களை இறைவனின் பால் வழிநடத்தும் மார்க்க அறிஞர்களை உருவாக்குவதுதான் மத்ரஸாக்களின் அடிப்படை நோக்கமாகும். இந்நோக்கத்தை நிறைவேற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மத்ரஸாக்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் (ஸிலபஸ்) வைக்கப்பட்டிருந்தன. இந்தியா போன்ற நாடுகளிலுள்ள பெரும்பாலான மத்ரஸாக்களில் சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக “ஸில்ஸிலயே நிஜாமிய்யா” எனும் பாடத்திட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது.
“ஸில்ஸிலயே நிஜாமிய்யா” எனும் புகழ்மிகு பாடத்திட்டத்தை வகுத்தளித்தபெருமைக்குரியவர் ஹள்ரத் முல்லா நிஜாமுத்தீன் சிஹாலவீ (ரஹ்) ஆவார். உ.பி. மாநிலம் லக்னோவிற்கு அருகிலுள்ள ஸிஹாலா என்ற ஊரில் ஹிஜ்ரீ 1088 ல் பிறந்த இவர் அன்ஸாரிகளின் பரம்பரையிலுள்ளவராவார்.
மார்க்கக் கல்விக்கு இவர் ஆற்றிய பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இல்முல் கலாம், உஸூலுல் ஃபிக்ஹு போன்ற எளிதில் விளங்க முடியாத கலைஞான நூல்களுக்கு அழகிய விரிவுரை எழுதிய இம்மேதை வகுத்தளித்த “தர்ஸே நிஜாமிய்யா’ இன்றளவும் உலகின் புகழ்மிகு மார்க்கக் கலைக் கூடங்களின் பாடத் திட்டமாய் விளங்கி வருகிறது .
உயரிய நோக்கத்தின் உள்ளொளியாய் இலங்கிடும் இப்பாடத் திட்டம் இதை உருவாக்கிய முல்லா நிஜாமுத்தீன் (ரஹ்) அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இம்மகான் ஹிஜ்ரி 1161 (கி.பி.1745) வஃபாத்தானார். 

நமது மத்ரசாஸாவின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பாடத்திட்டமே நடைபெற்று வருகிறது.  இப்பாட திட்டத்தில் பிற்காலங்களில் சில மாற்றங்கள் தேவைப்பட்டபோது தர்ஸெ நிஜாமீயின் அடிப்படை நோக்கத்திற்கு முரண்படாத வகையில் சில கிதாபுகளை சேர்க்கவோ நீக்கவோ செய்யப்பட்டடு‌ நமது பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ்  7 மற்றும் 9 வருடங்களுடைய விரிவான பாடத்திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம் .  7 ஆண்டுகள் படித்து முடிப்பவர்களுக்கு ஆலிம் பாகவி சனதும் ஒன்பதாண்டுகள் படித்து முடிப்பவர்களுக்கு ஃபாஸில் பாகவி சனதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஹனபி, ஷாஃபி மத்ஹபுகளின் ஃபத்வாக்கள் சம்பந்தமான பாடத்திட்டமும் கிராஅத் கலையில் மேல் வகுப்பிற்கான தகஸ்ஸுஸ் பாடத்திட்டமும் செயல்பட்டு வருகிறது.
எங்கள் பாடத்திட்டம் மாணவர்களை ஆழ்ந்த அறிவாற்றலும் இறை ஞானமும் வணக்க வழிபாடுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த பாடத்திட்டம் மார்க்க ஞானங்களை அதன் மூல மொழியான அரபு மொழியிலிருந்து சரியாக புரிந்து படித்தது விளங்கவும் மற்ற வர்களுக்கு விளக்கி கொடுக்கவும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுகிறது.